கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கலெக்டர் ஸ்ரீதர் நடவடிக்கை
கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில்:
கொலை வழக்கில் சிக்கிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு
தென்தாமரைக்குளம் போலீஸ் சரகம் தேங்காய்க்காரன் குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தேங்காய்க்காரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 31), வினோத் என்ற வினோத்குமார் (23), முகிலன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலஸ்ரீராமச்சந்திரன் என்ற கண்ணன் (29), அகஸ்தீஸ்வரம் அருகில் உள்ள பொன்னார்விளையைச் சேர்ந்த ஜெகன் (22) ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்கள் 4 பேரையும், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.