கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்திய வழக்கில் சின்னசேலம் தாலுகா வி.மாமாந்தூர் லட்சாதிபதி (வயது 34), பெரியசிறுவத்தூர் ஷர்புதீன்(38), உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ்(34), தொட்டியம் கிராமத்தை சேர்ந்த மணி(44) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் லட்சாதிபதி உள்ளிட்ட 4 பேரின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து லட்சாதிபதி, ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் லட்சாதிபதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.