4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பல்வேறு வழக்குகள்
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மதிபாலன் (வயது 27). இவர் மீது கொள்ளை, திருட்டு, அடிதடி, கொலைமுயற்சி வழக்குகள் உள்ளன.
இதேபோல் ராஜவல்லிபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் என்ற புலிக்குட்டி (28) மீதும் அடிதடி, கொலைமுயற்சி வழக்குகள் உள்ளன.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று, மதிபாலன், சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று மதிபாலன், சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
நெல்லை அருகே உள்ள வெட்டுவான்குளத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொக்கி குமார் (வயது 36). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாா். இதேபோல் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் புதுகிராமத்தை சேர்ந்த சங்கரன் மகன் அய்யப்பன் (23) என்பவரும் கொள்ளை, அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின்படி, 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல்களை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.