3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோ, பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
வேடசந்தூர் தாலுகா மாரம்பாடி அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர்கள் குணசேகரன் (வயது 41), பிரபாகரன் (28). இவர்கள் கடந்த மே மாதம் 16-ந்தேதி காலனி தெரு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை கத்தியால் வெட்டியும் ரகளை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறையை அடுத்த காட்டூரை சேர்ந்த சுரேஷ் (48) என்பவர் கடந்த மாதம் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதையடுத்து விளாம்பட்டி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.