வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்
மறைமலைநகரில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கில்...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் (வயது 34), செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்த இவரை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள டீக்கடையில் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மறைமலைநகர் வீரமாமுனிவர் தெருவை சேர்ந்த சபரி என்கிற சபரிநாதன் (வயது 23), உமறுப்புலவர் தெருவை சேர்ந்த வெங்கி என்கிற வெங்கடேசன் (29), தாயுமானவர் தெருவை சேர்ந்த பாலாஜி (22), சிங்கப்பெருமாள் கோவில் சத்யா நகர், காட்டுத் தெருவை சேர்ந்த பார்த்தா என்கிற பார்த்திபன் (27), ஆகிய நான்கு பேர் கடந்த ஜூன் மாதம் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
பின்னர் 4 பேரையும் நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது புழல் சிறையில் உள்ள இந்த 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின் பேரில் புழல் சிறையில் உள்ள 4 பேரையும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு நகலை மறைமலைநகர் போலீசார் புழல் சிறைத்துறை அதிகாரியிடம் வழங்கினர்.