ஓட்டேரியில் காரில் வந்த 5 பேர் கும்பல் கைவரிசை; மீன் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
ஓட்டேரியில் காரில் வந்த 5 பேர் கும்பல் மீன் வியாபாரியை சரமாரியாக வெட்டிக்ெகாலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவருடைய மனைவியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மீன் வியாபாரி
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு, கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 48). மீன் வியாபாரி. இவருடைய மனைவி ஜனகா. இவர்கள் இருவரும் கடந்த 6 மாதமாக ஓட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ெரயில்வே தண்டவாளத்தை ஒட்டி உள்ள சாலையில் மீன் வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், மீன் வாங்குவதுபோல் பார்த்திபனிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
ெவட்டிக்கொலை
அப்போது அந்த கும்பல் திடீரென தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் பார்த்திபனை சரமாரியாக வெட்டினர். இதில் பார்த்திபனின் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதனை கண்டதும் அங்கு மீன் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மனைவி ஜனகா, கணவரை வெட்ட விடாமல் மர்ம நபர்களை தடுக்க முயன்றார். அப்போது கொலைவெறி கொண்ட கும்பல் ஜனகாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன், ரத்த வெள்ளத்தில் மனைவி கண் எதிரேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி படுகாயம்
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த ஒட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜனகாவை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்ட மீன் வியாபாரி பார்த்திபனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பழிக்குப்பழியா?
கொலையான பார்த்திபனின் மகள் மற்றும் அவரது தோழிக்கு மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதுபற்றி அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுக்கு பழக்கமான நண்பர் அசோக் என்பவரிடம் கூறினர்.
இதையடுத்து 17-12-2021-ம் ஆண்டு அசோக், தனது நண்பர்களுடன் சேர்ந்து, பிரேம்குமாரை காரில் அழைத்துச்சென்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பிரேம்குமாரை அடித்துக்கொலை செய்தார்.
இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேம்குமாரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மீன் வியாபாரி பார்த்திபனை வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கண்காணிப்பு கேமராகாட்சிகள்
எனினும் அவரது கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம். கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவான காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுெகாலை சம்பவம் ஓட்டேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.