நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல்: ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும் அந்த வழியாக சென்ற 2 பேரை பட்டாக்கத்தியால் வெட்டியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
ரவுடி
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் பொன்னியம்மன் காலடி பிரதான சாலையை சேர்ந்தவர் வெள்ளை ஆனந்த் (வயது 30). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் உள்ளன. பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.
நேற்று முன்தினம் இரவு ரவுடி வெள்ளை ஆனந்தை கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தி மற்றும் பெட்ரோல் குண்டுடன் நன்மங்கலம் பகுதிக்கு வந்தனர்.
2 பேருக்கு வெட்டு
அப்போது அந்த வழியாக சென்றவர்களிடம், "ரவுடி வெள்ளை ஆனந்தின் வீடு எங்கே உள்ளது?" என கேட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த வழியாக வந்த தனியார் நிறுவன ஊழியர் கிருபாகரன், ஐ.டி.ஐ. மாணவர் மனோஜ்குமார் ஆகியோரை அந்த கும்பல் பட்டாக்கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
பின்னர் அந்த கும்பல், ரவுடி வெள்ளை ஆனந்த் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றனர். ஆனால் வீடு பூட்டிக்கிடந்தது. வெள்ளை ஆனந்த் அங்கு இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், பெட்ரோல் குண்டை அவரது வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
பெட்ரோல் குண்டு வெடித்து சி்தறியதில் வீட்டின் வெளியே வைத்து இருந்த 'வாஷிங்மிஷின்' மற்றும் அதன் மீது இருந்த அட்டை பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதில் அட்டை பெட்டியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வாஷிங்மிஷின் மேல் பகுதியும் சேதம் அடைந்தது.
பழிக்குப்பழியா?
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் ரவுடி வெள்ளை ஆனந்தை கொலை செய்யும் நோக்கத்துடன் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் யார்?. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அவர்களது உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக வெடிபொருட்கள் சட்டம் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மேடவாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவரை கொலை செய்த வழக்கில் வெள்ளை ஆனந்த் கைதாகி, தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இதனால் டில்லிபாபுவின் ஆதரவாளர்கள் பழிக்குப்பழியாக வெள்ளை ஆனந்தை கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.