சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் : 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் : 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

கோப்புப்படம்

சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 31-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகளும், சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளும் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளில் 1,352 சிலைகள் பிரமாண்டமானவை ஆகும்.

அதேபோன்று ஆவடி போலீஸ் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் போலீஸ் சரகத்தில் 699 சிலைகளும் விதவிதமான வடிவங்களில் வைக்கப்பட்டன. இதில் சிறிய வகை சிலைகள் நீர்நிலைகளில் தொடர்ந்து கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பெரிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் 'டிராலி' அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரமாண்ட சிலைகளை தூக்கிச்சென்று கரைப்பதற்காக ராட்சத கிரேனும் கொண்டு வரப்பட்டுள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், படகில் எடுத்து சென்று சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊர்வல பாதைகள்

சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலிலும், அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நீலாங்கரை பல்கலைநகர் கடலிலும், தங்கச்சாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், குன்றத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, திருவான்மியூர் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நீலாங்கரை பல்கலைநகர் கடலில் கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

வள்ளுவர்கோட்டம் வழியாக...

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பாடி மேம்பாலம் வழியாக நியூ ஆவடி சாலை, அண்ணா வளைவு, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாகவும், பூந்தமல்லி காட்டுப்பாக்கம், போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விருகம்பாக்கம், வடபழனி வழியாகவும், திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு வழியாகவும் வள்ளுவர்கோட்டம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா காந்தி சிலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட உள்ளது.

இதேபோன்று மணலி, மாத்தூர், காரனோடை, பாடியநல்லூர், செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மூலக்கடை சந்திப்பு, வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ், மின்ட் சந்திப்பு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து பட்டினப்பாக்கம் கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

15 ஆயிரம் போலீசார்

விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர்க்காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட இருக்கின்றனர்.

கடற்கரை பகுதியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.

ஊர்வல பாதைகள், சிலைகள் கரைக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story