செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்


செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:30 AM IST (Updated: 20 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் முக்கிய இடங்களில் சுமார் 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய் யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று வழிபாடு செய்யப் பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக செங்கோட்டை வண்டிமலச்சி அம்மன் கோவில் முன்புள்ள ஓம்காளி திடலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஊர்வலம் தொடக்க விழா

பின்பு நடந்த ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத்தலைவர் நல்லையா தலைமை தாங்கினார். வீரவிநாயகர் கமிட்டி தலைவர் முருகன் வரவேற்று பேசினார். அகில பாரத சன்னியாசிகள் சங்க மாநில இணைச்செயலாளர் ஆஞ்நேய மடாலய சுவாமி ராகவானந்தா, பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுசெயலாளர் ராம ஸ்ரீநிவாசன், வெளிநாடு மற்றும் வெளிமாநில வாழ் தமிழர் வளர்ச்சி கமிட்டி மாநில துணைத் தலைவர் ஆனந்தன், ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச்தென்பாரத அமைப்பாளர் பாத்திமாஅலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் விநாயகர் கமிட்டி வழிகாட்டு குழுத்தலைவர் காளி நன்றி கூறினார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை பாத்திமா அலி மலர்கள் தூவி தொடங்கி வைத்தார்.

குண்டாற்றில் கரைப்பு

ஊர்வலம் வண்டிமலச்சி அம்மன் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு கேசி ரோடு, வம்பளந்தான் முக்கு, வல்லம் ரோடு, செல்வவிநாயகர் கோவில் தெரு, எஸ்.ஆர்.கே. தெரு, தாலுகா அலுவலகம் ரோடு, மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெரு, பம்பு ஹவுஸ் ரோடு, சேர்வைகாரன் புதுத்தெரு, காசுக்கடை பஜார், கீழபஜார் வழியாக வந்து குண்டாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. கொட்டும் மழையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் பாரதீய ஜனதா, இந்து முன்னணி, இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

இதை முன்னிட்டு தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story