விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நகர்- புட்லூர் ஏரி, மப்பேடு- கூவம் (ஈசா ஏரி), வெள்ளவேடு திருமழிசை ஏரி, ஊத்துக்கோட்டை குளம், ஊத்துக்கோட்டை- கொசஸ்தலையாறு, திருத்தணி- காந்திரோடு குளம், ஆர்.கே பேட்டை- வண்ணான் குளம், பள்ளிப்பட்டு- கரீம் பேடு குளம், பொதட்டூர்பேட்டை- பாண்டரவேடு ஏரி, திருத்தணி- பராசக்தி நகர் குளம், கனகம்மாசத்திரம்- குளம், திருப்பாலைவனம்- புலிகாட் ஏரி, கும்மிடிப்பூண்டி- ஏழுகண்பாலம், திருவள்ளூர்- காக்களூர் ஏரி பக்கிங்காம்- கால்வாய், ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.