500 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி
ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.
இந்த சிலைகள் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, உச்சிப்புளி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த வருடம் விநாயகர் சிலைகள் அரசின் சுற்றுச்சூழல்துறை விதிகளுக்கு உட்பட்டு சுற்று சூழலுக்கு உகந்த தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக பிரிவினை வாதத்தை முறியடிப்போம். தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், இந்துக்களின் எழுச்சி விழாவாகவும் இந்த ஆண்டு விநாயாகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகத்திடம் ஒத்துழைப்பு அளித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.