விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு


விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
x

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

கரூர்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நொய்யல், புகழிமலை, புன்னம்சத்திரம், மரவாபாளையம், சேமங்கி, நடையனூர், கரைப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட 23 இடங்களுக்கு மேல் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று மாலை அனைத்து சிலைகளும் அந்தந்த பகுதிகளில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக புகழிமலை அடிவாரத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆற்றில் கரைப்பு

அதனைத் தொடர்ந்து மாலையில் 6.30 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வரிசைப்படி ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டன.

இதையொட்டி அந்த பகுதியில் அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குளித்தலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குளித்தலை நகரம் மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியில் இருந்து 3-ம் நாளான நேற்று குளித்தலை நகரப் பகுதிகளில் இந்து முன்னணி, பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் குளித்தலை நகரப் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டது. அதுபோல் கிராமப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அரவக்குறிச்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர், ஈசநத்தம் உள்ளிட்ட 12 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு ராஜபுரம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி அரவக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story