விநாயகர் சதுர்த்தி கோலாகலம் :பொது இடங்களில் 1,300 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு


தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பொது இடங்களில் 1300 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

கடலூர்


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கடலூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடந்தது. மாலையில் உற்சவருக்கு அபிஷேகமும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் காலையில் சிறப்பு வேள்வி பூஜையும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கணபதி ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து இரவில் வேதவிநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா காட்சி நடந்தது.

விநாயகர் சிலை ஊர்வலம்

மேலும் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், புதுக்குப்பம் சித்தி விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் ரெயிலடி விநாயகர் கோவில், முதுநகர் வெள்ளிப்பிள்ளையார் கோவில், வண்டிப்பாளையம் ரோடு சித்தி விநாயகர் கோவில், மஞ்சக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது. இதில் பக்தர்களுக்கு பொரி, கொண்ட கடலை, கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விருத்தாசலம்

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

குமராட்சி அருகே திருநாரையூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பொல்லாப் பிள்ளையார்கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் வெள்ளி கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி

இதேபோல் காட்டுமன்னார்கோவிலில் பஸ் நிலையம் அருகில் உள்ள மழுப்பொறுத்த விநாயகர், ஞான விநாயகர், செங்கழுநீர் விநாயகர், மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோன்று பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் பிரம்மாண்டமான லட்டு மற்றும் கொழுக்கட்டை,பழ வகைகள், பொரிக்கடலை ,சுண்டல் ஆகியவை வைத்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில் உள்ள வர சித்தி விநாயகர் கோவில், காந்தி ரோடு கத்திரி சின்ன பிள்ளையார் கோவில் படைவீட்டம்மன் கோவில் ஆகிய இடங்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

வீடுகளில் வழிபாடு

இதுதவிர வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். மேலும் வீடுகளில் மாவிலை தோரணங்கள் கட்டி, கோலம் போட்டு அலங்காரம் செய்து பூஜை அறையில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து, அணிகலன்கள் மற்றும் எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை அணிவித்து அவல், பொரிகடலை, கொழுக்கட்டை, நாவற்பழம், விளாம்பழம் மற்றும் பழ வகைகள், சுண்டல், பாயாசம் போன்றவற்றை படையல் வைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

1300 இடங்களில் சிலை பிரதிஷ்டை

இதேபோன்று, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தங்களின் தெருக்களில் 10 அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். இதில் வித, விதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று வரைக்கும் 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். நேற்று வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை 3 -வது நாள் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


Next Story