விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவைமுன்னிட்டு விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தான் விழா நடந்தது. ஆனால் தற்போது, கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் முன்எப்போதும் உள்ளது போன்று கோலாகலமாக விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனால் இந்த ஆண்டு விழுப்புரத்தில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தொடங்கி, சிறிய விநாயகர் சிலைகள் வரைக்கும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. நேற்று கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் குவிந்து காணப்பட்டது. இதனால் சாலையோர கடைகள் தொடங்கி மளிகை கடைகள் வரைக்கும் வியாபாரம் சூடுபிடித்திருந்தது.
விநாயகர் சிலைகள்
குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்பட்ட ஏராளமான சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விழுப்புரம் காமராஜர் சாலை, எம்.ஜி.சாலை, திரு.வி.க. சாலை, கே.கே.சாலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இதேபோல் விழுப்புரம் அருகே அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், அரசூர், சித்தலிங்கமடம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடி உயரத்தில் இருந்து 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட பல்வேறு தோற்றம் கொண்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் தங்களது பகுதிகளில் வைத்து வழிபடுவதற்காக வாங்கிச்சென்றனர்.