விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடித்தது
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடித்தது.
ஓசூர்
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓசூரில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஓசூர் எம்.ஜி. ரோடு, பாகலூர் ரோடு, தாலுகா அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, நேதாஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 10 அடி வரையிலான களிமண் மற்றும் குச்சிக்கிழங்கினால் தயாரிக்கப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு, மயில்வாகன கணபதி, சிங்க வாகன கணபதி, லால்பாக் ராஜகணபதி, தலைப்பாகை கட்டிய விநாயகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வடிவங்களில் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில், பொதுமக்கள் ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். ஓசூரில் சிலைகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
சிறப்பாக கொண்டாட...
மேலும், பல்வேறு அமைப்பினர், பக்தர்கள் முன்கூட்டியே பதிவும் செய்துள்ளனர். விநாயகர் பண்டிகை மற்றும் உற்சவத்திற்கு ஓசூர் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சதுர்த்தி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட, மக்கள் தயாராகி வருகின்றனர்.