விழுப்புரம் மாவட்டத்தில் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விழுப்புரம் மாவட்டத்தில் சதுர்த்தி விழாவுக்கு தேவையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுரித்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்களில் 5 அடி உயரம் முதல் 15 அடி உயரம் வரையுள்ள பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வரைக்கும் வைத்து வழிபாடு செய்யப்படும்.
சிலை தயாரிக்கும் பணி
சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 15 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில், அதற்கான சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, ராகவன்பேட்டை, சாலைஅகரம், கோலியனூர், பனையபுரம், அரசூர், சித்தலிங்கமடம், கரடிப்பாக்கம், வையாபுரிபட்டணம், அங்குசெட்டிப்பாளையம், திண்டிவனம் ஓங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெகுவிமரிசையாக விழா கொண்டாடப்படவில்லை. இதனால் சிலைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில், அந்த நிலை மாறும் என்கிற நம்பிக்கையுடன் தொழிலாளர்கள் முழுமையாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடு
இதுபற்றி விழுப்புரம் அய்யங்கோவில்பட்டை சேர்ந்த கைவினை தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காட்டுப்பாடு காரணமாக, இங்கு தயார் செய்யப்பட்ட சிலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தன.
இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். கொரோனா ஊரடங்கின்போது அரசு வழங்கிய இழப்பீட்டு நிதியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்கிற நம்பிக்கையில் சிலைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.
கடன் தள்ளுபடி
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கைவினை தொழிலாளர்களின் வாழ்வையே கொரோனா புரட்டிப்போட்டதால் நாங்கள், எங்களது தொழிலுக்காக வங்கிகளில் வாங்கிய கடன், நகை கடனை இன்னும் அடைக்க முடியாமலும், வட்டி செலுத்த முடியாமலும் சிரமப்பட்டு வருகிறோம். ஒவ்வொரு கைவினை தொழிலாளர்கள் நடத்தும் கம்பெனியினருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் உள்ளது. எனவே கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ததைப்போலவே கைவினை தொழிலாளர்களாகிய எங்களின் வாழ்வாதார நலனை கருதி நாங்கள், வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுத்து இத்தொழில் மேலும் நலிவடையாமல் இருக்க பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.