நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் விளையாட்டு போட்டிகள்
தேனியில் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
நேரு யுவகேந்திரா சார்பில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இளையோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. இதில், கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் இளையோர் மன்றங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தடகளம், கபடி, கோ-கோ, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆனால் முறையான முன்னேற்பாடு பணிகள் இன்றி இந்த போட்டிகள் நடத்தப்பட்டதால் வீரர், வீராங்கனைகள் சிரமம் அடைந்தனர். குறிப்பாக கபடி போட்டி நடந்த மைதானம் கட்டாந்தரையாக காணப்பட்டது. கபடி விளையாடும் போது வீரர்கள் அவ்வப்போது தரையில் சறுக்கி விழுந்தனர். அதுபோல், கோ-கோ போட்டிக்கு இருபுறமும் தூண் நடுவதற்கு பதில், தற்காலிக பிளாஸ்டிக் கோன்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், திறமைகள் இருந்தும் நேர்த்தியாக விளையாட முடியாமல் சிரமப்பட்டனர். எனவே, வரும் காலங்களில் போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகளுடன் போட்டிகள் நடத்த வேண்டும் என்பது விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் கோரிக்கையாக உள்ளது.