பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தாறுமாறாக கட்டணம்


பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தாறுமாறாக கட்டணம்
x

உடுமலை குட்டை திடலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தாறுமாறாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

திருப்பூர்

உடுமலை குட்டை திடலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தாறுமாறாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கூடுதல் கட்டணம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண வரும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக குட்டை திடலில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கு கடந்த மாதம் 27-ந் தேதி வருவாய்த்துறை மூலம் ஏலம் விடப்பட்டது. இதில் வாணியம்பாடியைச்சேர்ந்த மோகன் என்பவர் ரூ.65 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.23 லட்சம் அதிகமான தொகை என்பதால் இந்த கூடுதல் கட்டண சுமை பொதுமக்கள் மேல் திணிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே தற்போது குட்டை திடலில் ராட்சத ராட்டினம், டிராகன் ெரயில், கப் அண்ட் ஸாஸர், டோரா டோரா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்ச ஏலத்தொகை

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

'ஆண்டுதோறும் நடைபெறும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கிறோம். குடும்பத்துடன் ஒரு நாள் குட்டைக்கு சென்றால் பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியது உள்ளது. அந்த அளவுக்கு கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.70 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் கட்டணம் குறித்து அறிவிப்புப்பலகை எதுவும் வைக்காமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கட்டணத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் குறைந்தபட்ச ஏலத்தொகை நிர்ணயித்தும் கட்டணங்களை அரசே நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர். கூடுதல் கட்டணத்தால் வண்ணமயமான விளக்குகளுடன் ஜொலிக்கும் குட்டை இன்னும் களை கட்டாத நிலையே உள்ளது.


Related Tags :
Next Story