ஜி-20 மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
சென்னை,
உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி உள்ளனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு( 9-ந்தேதி ) விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.