ஆர்டர் செய்த டிசைனில் நகைகள் இல்லாததால் ஆத்திரம் - நகைப்பட்டறை தொழிலதிபரை கடத்திய கும்பல்


ஆர்டர் செய்த டிசைனில் நகைகள் இல்லாததால் ஆத்திரம் - நகைப்பட்டறை தொழிலதிபரை கடத்திய கும்பல்
x

ஆர்டர் செய்த டிசைனில் நகைகள் இல்லையென்ற ஆத்திரத்தில் நகைப்பட்டறை தொழிலதிபரை கும்பல் ஒன்று கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தங்க நகைப்பட்டறை நடத்தி வரும் இவர், தன் சகோதரி மகன் விஷ்னுவாசனையும் நகைப்பட்டறையில் வேலைக்கு வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 17-ம் தேதி செந்தில்குமார் மற்றும் விஷ்னுவாசன் இருவரும் தங்களின் வளர்ப்பு நாயுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர்களால் வழிமறித்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செந்தில்குமாரின் உறவினர்களை வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட கும்பல், தாங்கள் ஆர்டர் செய்த தங்க நகைகளை கேட்ட டிசைனில் தரவில்லை என்றும், நகைகள் நேர்த்தியாக இல்லையெனவும் கூறிய நிலையில், 47 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனடியாக இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது.

விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த தனபால் மற்றும் தனசேகர் ஆகிய இருவர், மங்கையர்க்கரசி என்ற பெண்ணுக்கு ஆர்டர் செய்த வளையலுக்காக தொழிலதிபரை கடத்தியது தெரியவந்தது. இந்த நிலையில், சிவகங்கையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நகைக்கடை தொழிலதிபரையும் மற்றும் அவரது சகோதரி மகனையும் மீட்ட போலீசார் கடத்தலுக்கு உதவிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் தனபால், தனசேகர் மற்றும் மங்கையர்க்கரசியை தேடி வருகின்றனர்.


Next Story