கல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது எப்படி?


கல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது எப்படி?
x
தினத்தந்தி 31 Oct 2022 11:36 PM IST (Updated: 31 Oct 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1000 உதவித்தொகை பெற கல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கை,

ரூ.1000 உதவித்தொகை பெற கல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் பயன்பெறும் வகையில், இணையதளத்தின் வாயிலாக பதிவுகள் மேற்கொள்வதற்கான கலந்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் "புதுமைப்பெண் திட்டத்தினை" கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதைதொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வங்கியின் மூலம் ரூ.1,000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இணையதளம்

தமிழக அரசு தற்போது உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000 பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.தற்போது, இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஏதுவாக தமிழக அரசால் இத்திட்டத்திற்கென தனியாக (https://www.pudhumaipenn.tn.gov.in) என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் மாணவிகளின் விவரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பதிவுகளை நவம்பர் 11-ந் தேதிக்குள் முடிப்பதற்கும் அரசால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கென, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் ஒரு அலுவலரை நியமித்து, மாணவிகளின் பெயர் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவைகளை, மாணவிகளிடம் பெற்று, அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக பதிவுகள் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், புதுமைப்பெண் திட்ட கமிட்டி உறுப்பினர்கள், வங்கிகள் சார்ந்த அலுவலர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story