ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
பொதுமக்களிடம் யாசகம் பெற்று சேமித்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களிடம் யாசகம் பெற்று சேமித்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று வழக்கம் போல் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தவிர்க்கும் வகையில் போலீசார் மனு அளிக்க வந்தவர்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
அவ்வாறு சோதனையிட்ட போது சாமியார் போன்ற ஒருவர் அங்கு வந்தார். அவரை கண்ட போலீசார் விசாரித்தபோது தான் ஒரு யாசகர் என்றும் யாசகம் செய்து சேமித்த பணத்தை நிவாரண நிதியாக கொடுக்க வந்திருப்பதாக கூறினார்.
யாசகம்
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:- என் பெயர் பூல்பாண்டியன். எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதி. நான் ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று அந்த பணத்தில் எனது தேவை போக மீதம் உள்ளவற்றை நிவாரண நிதியாக வழங்கி வருகிறேன். எனக்கென எந்த பணத்தையும் சேமிக்காமல் பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறேன்.
நான் யாசகம் பெற்று சேமித்த தொகையில் ரூ.10 ஆயிரத்தினை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ளேன்.
எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன். இதுவரை ரூ.51 லட்சத்து 30 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். பிறருக்கு உதவி செய்வதற்கு பெரும் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும் என்பதில்லை. கொடுத்து உதவ வேண்டும் என்ற மனம் இருந்தாலே போதும் என்பதற்கு பூல்பாண்டியன் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
நிவாரண நிதி
இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ள நிலையில் இவ்வாறு யாசகம் பெற்று உதவி செய்வதை தடுத்து விரட்டி விட்டதால் ஊர்ஊராக சென்று யாசகம் பெற்று நிவாரண நிதியாக வழங்கி வாழ்நாளை கழிக்க உள்ளதாக தெரிவித்தார். பூல்பாண்டியன் நிதி வழங்க சென்றபோது அதிகாரிகள் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கென தனியாக வங்கி கணக்கு உள்ளது. அந்த கணக்கில் செலுத்தினால் நேரடியாக முதல்வரின் நிவாரண நிதிக்கே சென்று விடும் என்று விவரம் கூறி அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரூ.10ஆயிரத்தை வங்கியில் செலுத்தினார்.