வேப்பனப்பள்ளி அருகே எருதுவிடும் விழா 250 காளைகள் பங்கேற்பு
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருதுவிடும் விழாவில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-ம் ஆண்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
பரிசு
இதையடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை விரைவாக கடந்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.