புரட்டாசி மாத பவுர்ணமி விழா: ஐந்து கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள்
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
புரட்டாசி பவுர்ணமி
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து ஐந்து கருட சேவை புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் திருவிழா நடைபெறவில்லை.
தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து தங்க கருட வாகனங்களில் வியூக சுந்தரராஜ பெருமாள், யாகபேரர் பெருமாள் புறப்பட்டு கூடலழகர் கோவில் வாசலில் உள்ள அத்தியயன மண்டபம் முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு எழுந்தருளினர்.
ஐந்து கருட சேவை
அதனைத் தொடர்ந்து மேலமாசி வீதி மதனகோபாலசாமி கோவிலில் இருந்து மதனகோபாலசாமி, ரங்கநாத பெருமாள் கருட வாகனங்களிலும், தெற்கு மாசி வீதி வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து வீரராகவ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி கூடலழகர் கோவில் அத்தியயன மண்டபம் முன்பு எழுந்தருளினர். ஒரே நேரத்தில் 5 கருட வாகனங்களில் பெருமாள் ஒரு சேர காட்சியளித்தனர்.
இதையடுத்து அங்கு பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று கோஷமிட்டு வழிபட்டனர். அப்போது பல்வேறு வாணவேடிக்கையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐந்து கருட வாகனங்களில் பெருமாள் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதிகளை வலம் வந்து கோவில்களை வந்தடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மதுரை விறகு கடை வியாபாரிகள் சங்கத்தினரும் செய்திருந்தனர்.