தூத்துக்குடி மீன்வள கல்லூரியிலிருந்து வாகனத்தில் மதிப்புக்கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் விற்பனை தொடக்கம்
தூத்துக்குடி மீன்வள கல்லூரியிலிருந்து வாகனத்தில் மதிப்புக்கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இருந்து வாகனத்தில் மதிப்புக்கூட்டிய மீன் உணவுப் பொருட்கள் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
மீன் உணவுப்பொருட்கள் விற்பனை
சென்னை தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதிஉதவியுடன் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் கடல்சார் உணவுப்பொருள் வணிகமையம் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட மீன் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே தனியார் நிறுவனம் மூலம் ஒரு உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மேலும் 2 மீன் உணவு விற்பனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வகையில் வாகனத்தின் மூலம் இந்த உணவு விற்பனை தொடக்க விழா மீன்வளக்கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு மீன்வளக்கல்லூரி முதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கி மீன்உணவு விற்பனை வாகனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களுக்கு சென்று மீன் உணவுகளை விற்பனை செய்யும். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மீன்பதன தொழில்நுட்ப துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் பா.கணேசன் செய்து இருந்தார்.
மாணவர்களுக்கு பயிற்சி
மேலும், தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ஆராய்ச்சிக்கான புள்ளியியல் கருவிகள் மற்றும் தரவு பகுப்பாய்வு மென்பொருள் குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் வகையில், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் "எஸ்.பி.எஸ்.எஸ் மற்றும் ஆா் மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கீட்டு புள்ளியியல்" என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி நடந்தது.
பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் கோ.அருள் ஒளி, பூ.மணிகண்டன் மற்றும் வெ.கோமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கோவில்பட்டி ஜி.வி.என் கல்லூரி, தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியை பேராசிரியர் மற்றும் தலைவர் ந.வ.சுஜாத்குமார் ஒருங்கிணைத்தார்.