நகரசபை கூட்டத்தில் இருந்துகவுன்சிலர்கள் வெளிநடப்பு
சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சீர்காழி;
சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நகரசபை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-ஏ.பி.எஸ். பாஸ்கரன்(தி.மு.க.) : பிச்சைக்காரன் விடுதியில் இன்று வரை கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்பட்டு வருகிறது. சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
காவிரி நீர்
ராஜசேகரன் (தே.மு.தி.க.) :- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காமல் அவமதிப்பு செய்யும் கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வரும் காலம் மழைக் காலமாக இருப்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.24 வார்டுகளிலும் அனைத்து அதிகாரிகளும் ஆய்வு பணி மேற்கொள்ள வேண்டும். எனது வார்டில் சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும். மேலும் வடிகால் வசதியை செய்து தர வேண்டும் என்றார்.
பிளாஸ்டிக் இல்லாத நகரம்
சாமிநாதன் (திமுக) : எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன் (பா.ம.க.) :நகர் பகுதியில் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டும் குப்பைகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி நகராட்சி சார்பில் கழிவுநீர் வாகனம் வாங்கவேண்டும். சீர்காழி நகர் பகுதியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.தேவதாஸ் (தி.முக.) :- எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும்.கஸ்தூரிபாய் (தி.மு.க.) :- எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
அடிப்படை வசதிகள்
தலைவர்:- அயோத்திதாசன் திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ்.டி. பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரும் காலம் மழைக் காலமாக இருப்பதால் முன்எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
வெளிநடப்பு
முன்னதாக சீர்காழி நகர சபை கூட கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கு நகா் மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை, தமிழகத்தில் உள்ள எந்த நகராட்சியிலும் மன்ற கூட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இது விதிகளுக்கு மாறாக உள்ளது. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது.சீர்காழி நகராட்சியில் விடப்படும் டெண்டர் பணிகள் நகர சபை தலைவருக்கு ஆதரவாக உள்ளவர்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் தரம் இல்லை எனக் கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் ரம்யா, வள்ளி, ரேணுகாதேவி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் நகர சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.