மோட்டார்சைக்கிளில் இருந்துதவறி விழுந்த 2 வாலிபர்கள் சாவுகோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து


கோவில் திருவிழா

ஈரோடு

ஊஞ்சலூர் அருகே கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

2 வாலிபர்கள்

சிவகிரி திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் சேகர். அவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சிவகிரி அம்மன் கோவிலை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் அருண்குமார் (21). இவர் நார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அருண்குமாரும், மணிகண்டனும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் ஊஞ்சலூர் அருகே கொந்தளத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தனர். பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு ஒத்தக்கடை சென்று டீ குடித்துவிட்டு அங்கிருந்து 2 பேரும் இரவு 10 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் சிவகிரிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். அவருக்கு பின்னால் அருண்குமார் அமர்ந்து இருந்தார்.

சாவு

கோட்டை காட்டுவலசு என்ற இடத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story