அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்


அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்
x
தினத்தந்தி 6 July 2023 1:45 AM IST (Updated: 6 July 2023 4:41 PM IST)
t-max-icont-min-icon

கண்டமனூர் அருகே, 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கொலை வழக்கில் கைது

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மகன் சீமான் (வயது 22). இவர், கடந்த 2021-ம் ஆண்டு கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

அப்போது 18 வயதுடைய சக வகுப்பு மாணவனை சுத்தியலால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சீமான், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் பள்ளி படிப்பை தொடராமல் வீட்டில் இருந்தார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சீமான் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை காணவில்லை என்று கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமானை தேடி வந்தனர். மேலும் அவர் ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடையதால் முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்காக கண்டமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கிணற்றில் உடல் வீச்சு

இதற்கிடையே தனிப்படை போலீசார் சீமானின் நண்பர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கண்டமனூரை சேர்ந்த சீமானின் நண்பர்களான சஞ்சீவ்குமார் (21), சந்தனகுமார் (24), பிரகாஷ் (23), லோகநாதன் (24) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் 4 பேரும் சேர்ந்து சீமானை கொலை செய்து, உடலை கண்டமனூர் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனையடுத்து அவர்கள் கூறிய பகுதியில் உள்ள கிணற்றுக்கு போலீசார் விரைந்து சென்றனர். அந்த கிணறு, சுமார் 50 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. இதனால் தீயணைப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கிணற்றில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடினர். அப்போது சீமானின் உடல், எலும்புகூடாக கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் எலும்புக்கூடுகளின் மாதிரியை டி.என்.ஏ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சஞ்சீவ்குமார் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

அடித்து கொலை

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா கூறுகையில், சீமான் மற்றும் கைது செய்யப்பட்ட அவரது நண்பர்கள் 5 பேரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கிடைக்கிற வேலையை செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி அவர்கள் 5 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது சீமானுக்கும் மற்ற 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் சேர்ந்து சீமானை அடித்து உதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சீமான் இறந்து விட்டார். அதன் பின்னர் கொலையை மறைப்பதற்காக வேலாயுதபுரம் அருகே உள்ள கிணற்றில் உடலை வீசி உள்ளனர். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. இதனால் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது என்றார்.

வாலிபரை, அவரது நண்பர்களே அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் கண்டமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story