தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம்... வாலிபர் படுகொலையில் முடிந்ததால் அதிர்ச்சி


தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம்... வாலிபர் படுகொலையில் முடிந்ததால் அதிர்ச்சி
x

கொலை செய்யப்பட்ட காதர் இஸ்மாயில்

தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுரை,

தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டம் வாலிபர் படுகொலையில் முடிந்தது. நண்பருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஓட்டல் முன்பு இரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை கோ.புதூர் அல்அமீன் நகரைச் சேர்ந்தவர் ராஜா உசேன் (வயது 43). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த காதர் இஸ்மாயில் (29), தல்லாகுளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

ராஜா உசேனின் நண்பர், பரவையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற முருகன் (32). இவர் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய தோழிகள், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சசிகலா (30), அண்ணாநகரைச் சேர்ந்த பபிதா (29), சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த வினோதினி (30). இவர்கள் 3 பேரும் பியூட்டி பார்லர் நடத்தி வருவதால், ரஞ்சித்தின் கேட்டரிங் நிறுவனத்தின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் அதிகமானது. இதற்கிடையே சரவணன், சசிகலாவை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தோழி பபிதாவின் பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் மாலை மதுரை சொக்கிகுளத்தில் உள்ள பேக்கரியில் அனைவரும் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இதனை தொடர்ந்து, இரவு உணவுக்காக மதுரையில் நத்தம் நான்குவழிச்சாலையில் காஞ்சரம்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்துக்கு புறப்பட்டனர்.

அப்போது ராஜா உசேன், ரஞ்சித் ஆகியோர் தங்கள் காரில், சசிகலா, வினோதினி, பபிதா ஆகிய 3 பேரையும் ஏற்றிக்கொண்டு சென்றனர். அந்த நேரத்தில், சரவணன் மற்றும் காதர் இஸ்மாயில் ஆகிய இருவரும் சசிகலாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, காஞ்சரம்பேட்டையில் உள்ள உணவகத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து உணவகத்துக்கு சரவணன், காதர் இஸ்மாயில் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு ரஞ்சித்தை பார்த்த சரவணன், தனது காதலி சசிகலாவை எப்படி காரில் அழைத்து வரலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு சரவணனுக்கு ஆதரவாக காதர் இஸ்மாயிலும் ரஞ்சித்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

நள்ளிரவு நேரம் என்பதால் உணவகத்தினர், தகராறில் ஈடுபட்டவர்களை வெளியேற்றி உள்ளனர். இதையடுத்து உணவகத்துக்கு வெளியே சென்ற 3 பேரும் அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், மறைத்து வைத்திருந்த கத்தியால் காதர் இஸ்மாயில் மற்றும் சரவணனை சரமாரியாக குத்தி உள்ளார். காதர் இஸ்மாயிலின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவர் மயங்கி விழுந்தார்.

இதனை தொடர்ந்து உணவக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து காயமடைந்த காதர் இஸ்மாயில், சரவணன் ஆகியோரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காதர் இஸ்மாயிலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோதல் குறித்த தகவலின்பேரில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற எம்.சத்திரப்பட்டி போலீசார், காதர் இஸ்மாயிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக, தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story