அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்
அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்" என்று கூறியுள்ளார்.