தவிட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை
தவிட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் மளிகை, டீ, கறிக்கடைகள், ஓட்டல்கள் பல செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில்களும் உள்ளன. இந்நிலையில் புகழூர் துணை மின் நிலையத்திலிருந்து இப்பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் அதிக நேரம் மின்சப்ளை இல்லாததால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகளும் வீட்டில் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படுவதால் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் நாசமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விவசாய நிலங்களில் உள்ள பணப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.