இலவச வேட்டி-சேலைகள் ஜனவரி 2-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும்-அமைச்சர் ஆர்.காந்தி தகவல்


இலவச வேட்டி-சேலைகள் ஜனவரி 2-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும்-அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
x

இலவச வேட்டி-சேலைகள் ஜனவரி 2-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

ஈரோடு

இலவச வேட்டி-சேலைகள் ஜனவரி 2-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

வேட்டி- சேலைகள்

ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் ஜவுளி கண்காட்சியை திறந்து வைத்த தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பொங்கலுக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலைகள் உற்பத்திக்கான டெண்டர் பணிகள் கடந்த 19-ந் தேதி முடிந்து விட்டது. டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு அரசு அளித்து இருக்கும் தகுதிகள் உள்ளனவா? என்ற சோதனை தற்போது நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் 8-ந் தேதிக்குள் நெசவுப்பணிக்கான நூல்கள் வழங்கப்பட்டு உற்பத்தி தொடங்கும். இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் வருவாய்த்துறைக்கு வழங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் வினியோகம் தொடங்கி விடும். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அனைவருக்கும் வேட்டி- சேலைகள் வழங்கப்பட்டு விடும்.

தரம்

தி.மு.க. ஆட்சியில் மிகத்தரமான நூலில் வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு புகார் கூட இல்லாத அளவுக்கு வேட்டி-சேலைகள் தரமாக உற்பத்தி செய்யப்படும்.

கைத்தறித்துறைக்கு தி.மு.க. அரசு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கைத்தறி நூல்கள், விசைத்தறியில் நெசவு செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடன் இல்லை

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.141 கோடி கடன் இருந்தது. அதனை ஒரு காசு கூட கடன் இல்லை என்கிற அளவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கும், நெசவாளர்களுக்கும் கடன் சுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்று சங்க உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், அரசு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கடன் இருக்கிறது என்பது தவறான செய்தியாகும்.

பெட்சீட் உற்பத்தியில் பாலியஸ்டர் நூல்கள் கலந்து இருப்பதாக புகார்கள் வந்தன. உடனடியாக அதுதொடர்பாக ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முழுமையாக பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட பெட்சீட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாலியஸ்டர் நூல் கலந்து நெசவு செய்யப்பட்ட பெட்சீட்களும் தனியாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இளைஞர்களுக்கு பயிற்சி

நெசவுத்தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.800 ஊதியம் என்ற நிலை வரவேண்டும் என்று திட்டமிட்டு அவ்வப்போது 10 சதவீதம் வீதம் ஊதிய உயர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களுக்கும் அதிக விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இளைஞர்கள் நெசவு தொழிலில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இங்கு இளைஞர்களுக்கு நெசவு பயிற்சி அளிப்பதுடன், தொழில் தொடங்க கடன் உதவியும் செய்யப்படும். பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் பெற்றும் வழங்கப்படும். முன்னோடி திட்டமாக 10 இடங்களில் இது தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

கலந்துரையாடல்

முன்னதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, "அனைத்து கோரிக்கைகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக்கூறப்பட்டு சிறந்த ஆலோசனை பெற்று, முன்னுரிமை அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் உங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசு தரப்பில் தேவையான உதவிகளை நாங்கள் தருகிறோம்" என்றார்.

கூட்டத்தில் அதிகாரிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கைத்தறித்துறை ஆணையாளர் கே.விவேகானந்தன், துணி நூல் துறை ஆணையாளர் எம்.வள்ளலார், கைத்தறி, கைவினைத்துறை, ஜவுளி, காதித்துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை இணை இயக்குனர் எஸ்.சுரேஷ்பாபுஜி ஆகியோர் பங்கேற்றனர். சங்கங்கள் சார்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், வி.கே.ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், கலைச்செல்வன், பா.கதிர்வேல், அருண்குமார் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story