மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் இலவச தடுப்பூசி முகாம்
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாகை மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுனர் டாக்டர் லியாகத்அலி கலந்து கொண்டார். முகாமை மண்டல இணை இயக்குனர்(பொ) விஜயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசுகையில், வெறி நாய் கடித்தால் அந்த இடத்தை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கடித்த நாய் உயிருடன் இருக்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 97 சதவீதம் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வெறி நோயை தடுக்க போடப்படும் தடுப்பூசியை செல்ல பிராணியான நாய்களுக்கு பிறந்த 90 நாட்கள் அதற்கு அடுத்து 120 நாட்கள் பின்னர் வருடத்திற்கு ஒரு முறையும் அவசியம் செலுத்த வேண்டும் என்றார். இதில் உதவி இயக்குனர் அசன்இப்ராகிம், உதவி டாக்டர்கள் ராதா, நந்தகுமார், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் சங்கர், கால்நடை ஆய்வாளர்கள் பாரிவேந்தன், முருகேசன், பராமரிப்பு உதவியாளர்கள் புவனரோகிணி, தேவி, ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடந்தது.