ரெயில்வே, வங்கி பணிகளுக்கு கட்டணமில்லா உறைவிட பயிற்சி- தமிழக அரசு தகவல்


ரெயில்வே, வங்கி பணிகளுக்கு கட்டணமில்லா உறைவிட பயிற்சி- தமிழக அரசு தகவல்
x

உறைவிட பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக தொடங்க இருக்கிறது.

சென்னை,

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கி பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான 6 மாத கால பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த உறைவிட பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக தொடங்க இருக்கிறது. உறைவிட பயிற்சிக்கு நுழைவுத் தேர்வுகள் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நடத்த உள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.


Next Story