சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது 621 காலியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி கடைசி நாள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. சிறந்த வல்லுனர்களை கொண்டு இந்த பயிற்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது. பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்படும். எனவே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.