மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் தகவல்


மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

தூத்துக்குடி

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

போட்டித் தேர்வு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் 45 ஆயிரத்து 284 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் எஸ்.எஸ்.சி. கான்ஸ்டபிள் தேர்வு அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும்.

மேலும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எல் (ஒருங்கிணைந்த மேல்நிலை பள்ளி தகுதி) தேர்விற்கு 4 ஆயிரத்து 500 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு வருகிற ஜனவரி 4-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் வயதுச்சலுகை உண்டு. மேலும் விபரங்களை http://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் தெறிந்து கொள்ளலாம். மேலும் பல்நோக்கு பணியாளர்களுக்கான தேர்வும் விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள்

இந்த போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அலுவலக வேலைநாட்களில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள 9942503151 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story