கள்ளக்குறிச்சியில் சீருடைப்பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்: 31-ந் தேதி தொடங்குகிறது
கள்ளக்குறிச்சியில் சீருடைப்பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சீருடைப்பணியாளர் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் 3,359 காலி பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர்) தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தகுதியுள்ள இளைஞர்கள் வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச பயிற்சி வகுப்புகள்
இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 31-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நுாலக வசதி, இணையதள வசதி மற்றும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்
இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரித்தேர்வுகளும் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8807204332 என்ற வாட்ஸ்-ஆப் எண் அல்லது கள்ளக்குறிச்சி 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு TNUSRB விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம், ஆதார் நகலுடன் பதிவு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.