கோவில்கள் சார்பில் 2-ம் கட்டமாக 161 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


கோவில்கள் சார்பில் 2-ம் கட்டமாக 161 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x

கோவில்கள் சார்பில் 2-ம் கட்டமாக 161 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

சென்னை,

2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஒரு இணை கமிஷனர் மண்டலத்துக்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவை கோவில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி முதற்கட்டமாக சென்னை மண்டலங்களை சேர்ந்த கோவில்கள் சார்பில் திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கும், இதர இணை கமிஷனர் மண்டலங்களில் 186 ஜோடிகளுக்கும் என மொத்தம் 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

161 ஜோடிகளுக்கு...

இந்தநிலையில் 2-ம் கட்டமாக, 19 இணை கமிஷனர் மண்டலங்களைச் சேர்ந்த கோவில்களின் சார்பில் 161 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு 4 கிராம் தாலியுடன் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டுப் புடவை, சீர்வரிசைப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கோவில்களில் சார்பில் 378 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.

ரூ.50 ஆயிரமாக உயர்வு

கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமணங்களுக்கான திட்ட செலவின தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story