போட்டித் தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு


போட்டித் தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 16 April 2023 6:45 PM GMT (Updated: 16 April 2023 6:47 PM GMT)

மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

7,500 காலிப்பணி இடங்கள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் சி நிலையில் 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை அறிவித்துள்ளது.

பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இக்காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம்(மே) மாதம் 3-ந் தேதி ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அதே மாதம் 4-ந் தேதி ஆகும்.

தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்கள், புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 7 மையங்கள், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்கள் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.

இலவச பயிற்சி வகுப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில் ''TN Career Services Employment' ' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின்'AIM TN' என்ற யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story