சுகாதார பணியாளர்களுக்கு இலவச 'இன்புளூயன்சா' தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
“சுகாதார பணியாளர்களுக்கு இலவச ‘இன்புளூயன்சா' தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் முகாம்கள்
சென்னை சைதாப்பேட்டையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரை 'இன்புளூயன்சா' என்ற வைரஸானது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏற்பட்டிருக்கிறது. இந்த எச்3என்1 என்ற வைரஸ், இந்தியா முழுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது, அதற்குரிய நடவடிக்கை எடுப்பது என்ற வகையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக வைரஸ் காய்ச்சல்களுக்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நடைபெற்று, நேற்று (நேற்று முன்தினம்) மாலை வரை 33,544-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14,13,460 பேர் பயன்பெற்றுள்ளனர். 8,775 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது குணம் அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிப்புகள் இந்த நடவடிக்கைகளின் மூலம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மருத்துவ பணியிடங்கள்
கடந்த 'பட்ஜெட்'டின் போது 4,308 டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியிடங்கள் மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 1,021 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கு தற்போது முடிவுற்றதால், அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த 1,021 பணியிடங்களுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள ஆஸ்பத்திரிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
இலவச 'இன்புளூயன்சா' தடுப்பூசி
986 மருந்தாளுனர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் 26, 27-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த 2 தேர்வுகளும் முடிந்த பிறகு, பணி ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மே மாதம் வழங்குவார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி 'இன்புளூயன்சா' காய்ச்சல் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.