இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி வெங்கேடேசா காலனியில் உள்ள போலீஸ் திருமண மண்டபத்தில் திருநங்கைகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, திருநங்கைகளிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் திருநங்கைகளிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கோவை மாவட்ட சமூகநலத்துறை இளநிலை உதவியாளர் மலர்விழி, கோவை மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் சையது உசேன், தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, கோவை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க செயலாளர் வீணா யாழினி, சகோதரி அறக்கட்டளை நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு வீடுகள் இல்லாததால் வாடகை வீடுகளிலும், குடிசை பகுதிகளிலும் வசிக்கின்றனர். எனவே திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு வங்கி கடன், பசுமை வீடுகள் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். நலவாரிய அட்டைகளை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு மூலம் பணி ஆணை வழங்கவும், திருநங்கைகளுக்கான கல்வி மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மனுக்கள் மீது நடவடிக்கை
இதுகுறித்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூறியதாவது:-
முகாமில் திருநங்கைகள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீடு கட்டுவதற்கு வங்கி கடன்கள், நிலப்பட்டா, தொழில் செய்வோருக்கு சுயஉதவி கடன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தாலுகா வாரியாக திருநங்கைகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.