இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர வேண்டும்; கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
நெல்லை அருகே இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு வழங்கினர்.
நெல்லை அருகே இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு வழங்கினர்.
பத்திரப்பதிவு செய்து தர...
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தச்சநல்லூர் அருகே உள்ள மாவடிகுளத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், ''கடந்த 2007-ம் ஆண்டு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 112 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த இடங்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர். தற்போது பத்திரப்பதிவு செய்வதற்கு சென்றால், செய்து தர மறுக்கிறார்கள். இதனால் எங்களால் வீட்டை கட்டவோ, புதுப்பிக்கவோ முடியவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
கூலி வழங்க...
நெல்லை சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை கீழப்பாட்டம், குன்னத்தூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 21 ஆயிரத்து 400 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மூட்டைகளுக்கு சுமை தூக்கும் கூலியாக அரசு ஒரு மூட்டைக்கு ரூ.10 வழங்கி வருகிறது. தற்போது நெல் மூட்டைகளை முறையாக குறித்த காலத்தில் ஏற்றுமதி செய்யாத காரணத்தினால் வெயில், மழையில் நனைந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை காரணம் காட்டி எங்களுக்கு கூலி தர மறுக்கிறார்கள். எனவே உடனடியாக கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தனது சொத்தையும், பணத்தையும் மகன்கள் அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுக்கிறார்கள் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
தமிழர் உரிமை மீட்புகளம் தென்மண்டல அமைப்பு செயலாளர் கணேசன் பாண்டியன், லெனின், வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் முத்துபாண்டியன், துரைப்பாண்டியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முத்துவளவன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், ''நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கல்குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி கற்களை வெட்டி எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சட்ட விரோதமாக அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கற்களை தோண்டி எடுத்ததில் குவாரியில் கல் சரிந்து விழுந்ததில் 4 பேர் இறந்து விட்டார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள தருவை கிராம பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஏராளமானவர்களை அழைத்து வந்திருந்தனர். இருந்தாலும் நாங்கள் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை. எனவே அந்த கருத்து கேட்பு கூட்டத்தை நிராகரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.