மழைநீர் வடிகால் பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி


மழைநீர் வடிகால் பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி
x

மழைநீர் வடிகால் பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி

தஞ்சாவூர்

தஞ்சை முள்ளுக்காரத்தெரு பகுதியில் மழைநீர் வடிகால் பாலம் கட்டப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தற்காலிக மரப்பலகை பாலமும் சேதம் அடைந்துள்ளது.

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை நகராட்சி கடந்த 2014-ம்ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதி முழுவதும் மழைநீர் வடிகால்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பி அதன் மேல் கான்கிரீட் மூடி போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.

தரைப்பாலம் இடிப்பு

தஞ்சை கீழவாசல் முள்ளுக்காரத்தெரு பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது சாக்கடை நீரும் செல்கிறது. மழைகாலங்களில் தண்ணீர் அதிக அளவு வரும் போது இந்த பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகின்றன. இதனால் மழைநீர் வடிகால் வாய்க்காலை கட்டித்தருவதாடு, பொதுமக்கள் நடந்து செல்வதற்கான பாலத்தையும் உயர்த்தி கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது இருந்த பாலம் இடிக்கப்பட்டு புதிய காலம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள குறிஞ்சிநகர், பாலோபநந்தவனம்ஆகிய இடங்களிலும் இதே போன்று தரைப்பாலம் இடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தற்காலிக மரப்பலகையினால் ஆன பாலம்போடப்பட்டது.

மரப்பலகை பாலமும் சேதம்

தற்போது அந்த பாலமும் சிதிலமடைந்து பொதுமக்கள் அச்சத்துடனே நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. பழைய பாலம் இடிக்கப்பட்டு 3 மாதம் ஆகியும் இன்னும்புதிய பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாததால் அந்த பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், முள்ளுக்காரத்தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழை காலங்களில் இந்த வாய்க்காலில் மழைநீர் அதிக அளவு செல்லும் போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். எனவே மழைநீர் வடிகாலை சீரமைப்பதோடு, பொதுமக்கள் நடந்து செல்ல ஏற்கனவே உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

சாக்கடைக்குள் தவறி விழுகின்றனர்

அதன்படி புதிய பாலம் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பாலத்தை இடித்தனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தற்காலிக பாலமும் அமைத்து கொடுத்தனர். ஆனால் தற்போது தற்காலிக பாலமும் நாளுக்குநாள் சிதிலமடைந்து வருகின்றன. மரப்பலகை பாலத்தில் அமைக்கப்பட்ட தடுப்புக்கட்டைகளும் சாய்ந்த நிலையில் உள்ளது. வயதானவர்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. வயதானவர்கள் தவறி சாக்கடைக்குள்ளும் விழுந்து விடுகின்றனர். இதுவரை 3 பேர் விழுந்துள்ளனர். முள்ளுக்காரத்தெரு பொதுமக்கள் கடைக்கு, அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர வேண்டுமானால் இந்த பாலம் வழியாகத்தான் வர வேண்டும். தற்போது பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

ஆனால் மற்ற இடங்களில் பாலம் இடிக்கப்பட்ட இடங்களில் ஒரு சில நாட்களிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முள்ளுக்காரத்தெரு பாலம் இடிக்கப்பட்டு 3 மாதம் ஆகியும் இன்னும் புதிய பாலம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.


Related Tags :
Next Story