கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி -கல்வித்துறை உத்தரவு.
சென்னை,
கொரோனா நோய் தொற்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றின் தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. அதில் ஒரு பகுதியாக பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி கட்டணத்தில் விலக்கு அளித்து உத்தரவிட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வி ஆண்டிலும் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு (இலவச கல்வி) அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்.) வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளபடி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி படித்து கொண்டு இருப்பின், அவர்களிடம் கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.