ஐ.பி.பி.எஸ்.-போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
ஐ.பி.பி.எஸ்.-போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர் கற்றலுக்காக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொலிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அத்துடன் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மறு ஒளிபரப்பாக இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐ.பி.பி.எஸ். தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை போலீசார் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள், இளைஞர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.