திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவால்தார் ஆகிய பணியிடங்களுக்கு மத்திய அரசு பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகாலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியும், வயது வரம்பு 01/01/2023 தேதியின்படி 18 முதல் 27 வரையிலும் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17-02-2023 ஆகும். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளவும்.
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 01-02-2023 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.
கலெக்டர் தகவல்
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 9499055893 மற்றும் 8637639822 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.