மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
ஆலங்குடி அருகே வேங்கிடாகுளம் அரசு உதவி பெறும் தூய வளநார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மரிய அந்தோணிராஜ் வரவேற்றார். திருவரங்குளம் மேற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கமணி, அரு.வடிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான உஷா செல்வம், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 151 மாணவர்களுக்கும், வேங்கிடாகுளம் தூய வளநார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 149 மாணவர்களுக்கும் என மொத்தம் 300 பேருக்கு ரூ.14 லட்சத்து 48 ஆயிரத்து 20 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து கத்தக்குறிச்சி, வாண்டாக்கோட்டை மற்றும் வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் மின் அழுத்தம் சரிசெய்யப்பட்டு, பொது பயன்பாட்டுக்கு அமைச்சர் திறந்து வைத்தார். வல்லத்திராக்கோட்டையில் பெரமர் திரவுபதியம்மன் கோவில் முன் மண்டபம் மராமத்து பணியையும் தொடங்கி வைத்தார். பள்ளத்திவிடுதி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.39 லட்சம் மதிப்பிலான பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய ஆணையர்கள் ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன், வேங்கிடாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சேவியர், பள்ளத்திவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாண விகள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேங்கிடாகுளம் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.