பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வள்ளியூர் (தெற்கு):
பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
நெல்லை மாவட்டம் பணகுடி, வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் ஆயிரம் பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாார். பின்னர் பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சகாயராணி முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சபாநாயகர் இலவச சைக்கிள் வழங்கினார். இதேபோல் பல்வேறு பல்வேறு பள்ளிக்கூடங்களில் சபாநாயகர் பங்கேற்று மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
பயணிகள் நிழற்குடை
அதனை தொடர்ந்து பணகுடி மனோ கல்லூரியில் சபாநாயகர் அப்பாவு ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மாதவன், பேராசிரியைகள் லல்லி கிறிஸ்டி, திலகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து லெப்பைகுடியிருப்பு - காவல்கிணறு பிரிவு ரோடு, சிவகாமிபுரம் நான்கு வழிச்சாலை கீழ்ப்புறம், பாம்பன்குளம் நான்கு வழிச்சாலை மேல்புறம் ஆகிய இடங்களில் தலா ரூ.12 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் பணகுடி அண்ணா நகரில் ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.
கூட்டுக்குடிநீர் திட்டப்பணி
ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, களக்காடு, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு கடந்த 18-ந் தேதி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக தெற்கு வள்ளியூர், ஆ.திருமலாபுரம், அச்சம்பாடு, கோவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய குக்கிராமங்களின் ஊரக குடியிருப்புகளுக்கு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளையும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, பயணிகள் நிழற்குடை, அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாஸ்கர், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன், தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான நம்பி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தில்லை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.