மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு -டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி நிதிநிறுவனங்களிடம் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிய பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை,
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் மோசடி நிதி நிறுவனங்கள் பற்றிய வழக்குகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு, எல்.என்.எஸ், ஐ.எப்.எஸ் மற்றும் எல்பின் போன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை குறித்த தற்போதைய நிலை, கைதானவர்கள் பற்றிய தகவல், ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தருதல் போன்ற விவரங்கள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவர்களை கைது செய்வது குறித்து எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
பணத்தை திரும்ப பெற்றுத்தருதல்
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது சம்பந்தமாகவும், ஏஜெண்டுகளாக செயல்பட்ட 1,500 பேர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை பெறவும், மோசடி நிறுவனங்களிடம் பணம் செலுத்தி ஆரம்ப காலத்தில் உரிய லாபம் பெற்றவர்களிடம் இழப்பீடு பெறுவது பற்றியும் அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் உரிய பணத்தை திரும்ப பெற்று தருவதற்காக உரிய ஏற்பாடுகளை விரைவாக செய்யவும், கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா மீது குற்றப்பத்திரிகை
ஆருத்ரா கோல்டு மோசடி நிறுவனம் மீது நேற்று சிறப்பு கோர்ட்டில் முதல் கட்டமாக 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முழுவதும் முடிவடைந்த பிறகு அடுத்த கட்டமாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும், என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.