மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி; அரசு பள்ளி ஆசிரியர் கைது


மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி; அரசு பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2023 9:00 PM GMT (Updated: 25 Jun 2023 11:40 AM GMT)

தேனி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

தேனி

தேனி அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.26½ லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மின்வாரியத்தில் வேலை

தேனி அருகே கோட்டூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மர் மகன் ராஜா (வயது 35). அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி மகன் கிருபானந்த தயாநிதி (37). இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ராஜா அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். அதை அறிந்த கிருபானந்த தயாநிதி, அவருடைய மனைவி மணிமேகலை, அவர்களுடைய குடும்ப நண்பர்கள் என்று கூறப்படும் தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையை சேர்ந்த ராமலிங்கம் மகன் முத்துவேல், போடி தென்றல் நகரை சேர்ந்த யேசுராஜாமணி மகன் இமானுவேல் ராஜ்குமார் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு ராஜாவை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலம் மின்வாரியத்தில் வேலை வாங்கிக்கொடுப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினராம்.

ரூ.26½ லட்சம் மோசடி

அதை நம்பிய ராஜா, கிருபானந்த தயாநிதி மற்றும் அவருடைய மனைவியிடம் ரூ.3 லட்சம் கொடுத்தார். ஆனால், அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக்கொடுக்காமல் இருந்தனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், ராஜா புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதேபோல், அதே ஊரைச் சேர்ந்த மேலும் 4 பேரும் கிருபானந்த தயாநிதி உள்ளிட்டோரிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்படி 5 பேரிடமும் மொத்தம் ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக கிருபானந்த தயாநிதி, மணிமேகலை, முத்துவேல், இமானுவேல் ராஜ்குமார் ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கிருபானந்த தயாநிதியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசார் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story